சென்னை அக், 9
அதிமுகவிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினருடன் எல்லா ஆலோசனைகளிலும் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென எடப்பாடி பழனிசாமியின் கட்சிக்கு தாவினார்.
பின்னர் 3 மாதங்கள் கழித்து நேற்றைய தினம் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார் மைத்ரேயன்.
நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் மைத்ரேயனும் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தரவில் அதிமுக அமைப்பு செயலாளர் உள்பட அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் மைத்ரேயன் நீக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.