Spread the love

தஞ்சாவூர் அக், 8

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு 2016-18-ம் ஆண்டுகள் வரை விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஊக்கத் தொகையை வட்டியுடன் புதிய நிர்வாகம் வழங்க வேண்டும். எங்களுக்கே தெரியாமல் பல வங்கிகளில் எங்களது பெயரில் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்களது பெயரில் கடன் தொகை இருப்பதால் வேறு எந்த கடனும் வாங்க முடியவில்லை. எனவே கடன் இல்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும். எங்கள் பெயரில் உள்ள சிவில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டபிறகு புதிய நிர்வாகம் ஆலை பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும்.

இனிமேல் கரும்பு அரவை செய்தால் 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். கையெழுத்து போட்டால் தான் முழு தொகையையும் தருவோம் என ஆலை நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜஸ்டின், கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் முனுசாமி, தலைமை நிதி அலுவலர் மணிகண்டன், கரும்பு உற்பத்தி ஆலோசகர் கந்தசாமி மற்றும் வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *