திருவாரூர் ஆகஸ்ட், 3
கோட்டூர் அருகே படுக்கையூர் கிராமத்துக்கு பாண்டி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த பாலம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குல மாணிக்கம் ஊராட்சி படுக்கையூர் கிராமத்தின் அருகில் கோரையாற்றிலிருந்து பிரிந்து பாண்டி ஆறு மற்றும் நருவெளிகளப்பாள் பாசன வாய்க்கால் செல்கிறது.
இந்த கிராமத்தில் இருந்து அனைத்து பணிகளுக்கும் செல்பவர்கள் இந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்காகவே இரும்பு நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் முற்றிலும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சம் இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகள், முதியவர்கள் விவசாயிகள் என அனைவருமே இந்த பாலத்தின் வழியாக தான் நடந்து சென்று வருகின்றனர். இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நேரில் மனு கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் அதிகமாக தண்ணீர் வருவதால் பள்ளி மாணவ- மாணவியர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக சென்று வரமுடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவில் பாண்டி ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.