திண்டுக்கல் அக், 2
ஆயுதபூஜை வருகிற 4 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இந்த ஆயுதபூஜைக்கு வழிபாட்டின்போது வாழைப்பழம், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட படையலுடன் பொரி முக்கிய பங்கு வகிக்கும். இந்த பொரி தயாரிப்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி, எரியோடு கிராமங்கள் பெயர் பெற்றதாகும்.இங்கு தயாராகும் பொரி திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை நெருங்கி வருவதை முன்னிட்டு அழகாபுரி, எரியோடு கிராமங்களில் உள்ள ஆலைகளில் பொரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது.