திருவாரூர் அக், 1
வலங்கைமானில், அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிசை தொழிலாக 5 குடும்பத்தினர் மட்டும் பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வந்தனர்.
இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பலரும் தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். வலங்கைமானில் உள்ள கீழத்தெரு, பாய்க்காரதெரு, சுப்பன் நாயக்கன் தெரு, செட்டித்தெரு, வடக்கு அக்ரஹாரம், நடு அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், உப்புக்கார தெரு கடைத்தெரு மற்றும் மகா மாரியம்மன் கோவில் அருகில் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு, கடை, குடோன்களில் தீபாவளி விற்பனைக்காக ஏராளமான பட்டாசுகளை தயார் செய்து வைத்து இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இலக்கியா தலைமையில் ஆய்வாளர் ராஜா, துணை ஆய்வாளர்கள் ராஜேஷ் குமார், காமராஜ் மற்றும் காவல் துறையினர் வலங்கைமானில் வெடிக்கடைகள் இயங்கும் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் 9-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வைத்து இருந்ததாக கூறி கடைகள், வீடுகள் மற்றும் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை லாரிகளில் ஏற்றி விருப்பாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு குடோனுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். பட்டாசு கடை நடத்தி வந்த 9 பேரை காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சோதனையையொட்டி அந்த பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.