நெல்லை அக், 1
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அசோக்குமார் பேசியதாவது,
விவசாயிகளுக்கு அடிப்படை இடு பொருள்களான உரம் மற்றும் விதை தங்கு தடை இன்றி தரமானதாக கிடைத்திட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் அவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட முழுவதும் சிறப்பு பறக்கும் படை அமைத்து உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தல், தரமற்ற உரங்களை விற்பனை செய்தல் ஆகிய புகாரின் அடிப்படையில் 7 உர விற்பனை நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களிலும் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த 36 விற்பனை நிலையங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு தற்போது வரை 703 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் 612 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. அதில் 9 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரமற்ற விதைகள் சுமார் ரூ.57 லட்சம் மதிப்பில் 31 மெட்ரிக் டன் விதைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 2022-2023-ம் ஆண்டிற்கு பிசான பருவ நெல் மற்றும் உளுந்து, பாசி பயிறு, மக்காச்சோளம் மற்றும் தோட்டக்கலை பயிரான வாழை ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் நமது மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தேவைகள் மற்றும் குறைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வனத் துறையினர், வேளாண்துறை அதிகாரிகள் உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.