அரியலூர் செப், 30
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கூறியதாவது,
அரியலூர் மாவட்டத்தில் இயன்ற வரை அனைவருக்கும் நுகர்வோர் சட்டக் கல்வி பயிற்சி நடத்துவது என்ற அடிப்படையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலகம் சார்பாக பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. சேவை கட்டணம் இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள வருவாய்த் துறையினரும், நில அளவை பதிவேடு துறையினரும் பொதுமக்கள் சேவை கட்டணம் செலுத்தி கேட்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
இதன் மூலம் நுகர்வோர் பிரச்சினைகள் வழக்குகளாக மாறக்கூடிய நிலை தவிர்க்கப்படும். கடந்த 6 மாதங்களில் அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு சில வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய சட்டத்தின்படி நுகர்வோர் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தவறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது