காஞ்சிபுரம் செப், 28
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தில், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான தொழில் தொடங்க வங்கி மானிய கடன் உதவிகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார். வேளாண் வணிக துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான மரச்செக்கு மற்றும் மாவு அரைக்கும் எந்திரம் வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், வேளாண் துணை இயக்குநர் முகமது இரபீக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.