Spread the love

சிவகங்கை செப், 25

பிரான்மலை பகுதியில் தொடர் மழையால் கடலை செடிகளில் போதிய விளைச்சல் இல்லை என கடலை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சிங்கம்புணரி அருகே புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, ஒடுவன்பட்டி, கிழவயல், முசுண்டபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மற்றும் கண்மாய் பாசனம் மூலம் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பிரான்மலை அடிவாரம் பகுதி மக்கள் மழைக்காலங்களில் மழைநீரை பயன்படுத்தி விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அச்சமயத்தில் கடலை, காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் வயல்களில் கடலை சாகுபடி மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த இந்த கடலை செடிகள் உள்ள வயலில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பெரும்பாலான கடலை செடிகள் அழுகியது.

மேலும் மீதமுள்ள செடிகளை காப்பாற்றிய நிலையில் தற்போது அறுவடை செய்து பார்த்தால் கடலையின் விளைச்சல் குறைந்து, அதன் பருமன் சிறிதாகவும் உள்ளதால் வெளிச்சந்தைக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் தற்போது உறவினர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *