காரைக்கால் செப், 24
மத்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனரகம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, இலவச கணினி மென்பொருள் பயிற்சி தொடங்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்த பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர். ஓராண்டு காலம் இப்பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 மத்திய அரசால் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வியாசராயர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை வேலைவாய்ப்பு அலுவலர் கோட்டூர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.