கோயம்புத்தூர் செப், 21
பொள்ளாச்சி, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கபசுர குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது சித்த மருத்துவ அலுவலர் வளர்மதி, மருந்தாளுனர் காமராஜ், பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.