நெல்லை செப், 20
நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் குட்கா கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து மேலப்பாளையம் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் நெல்லை புதிய பேருந்துநிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஒரு ஆம்னி பேருந்து வந்தது. காவல்துறையினரை பார்த்ததும் பேருந்து நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.
உடனே காவல் துறையினர் அந்த ஆம்னி பேருந்தை விரட்டிச் சென்றனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்த இந்த காட்சியால் சாலையோரத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் விரட்டிய நிலையில் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் ஆம்னி பஸ் சென்ற போது போலீசார் அதனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த பஸ்சில் சோதனையிட்ட போது 8 பெட்டிகளில் 125 கிலோ குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஓட்டுனர் மற்றும் நடத்துநர் விசாரணை நடத்தினர். இதில், அவர்களுக்கு தெரிந்தே குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த ஆம்னி பேருந்தைம் பறிமுதல் செய்து மேலப்பாளையம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.இவை யாருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.