திண்டுக்கல் செப், 20
கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது அவகோடா பழங்கள் சீசன் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பழம் வயிற்று புண்ணை ஆற்றுவதுடன், உடல்சூட்டை தணிக்க கூடியது.
மேலும் முகத்திற்கு பூசும் ‘பேசியல் கிரீம்’ செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் இந்த பழத்தை வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதேபோல் வெளியூர் வியாபாரிகளும் இங்கு வந்து அவகோடா பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.