கோயம்புத்தூர் செப், 19
ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சுமார் 7½ டன் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படுகின்றது. காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாகவும் மற்றும் மண்புழு உரமாகவும் தயாரிக்கப்படுகிறது.
மேலும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கவர் போன்றவற்றை மறுசுழற்சி செய்யவும் விற்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாதத்திற்கு 2 முறை பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த தீவிர முயற்சியால் குப்பைகள் மலை போல் குவியாமல் உரம் தயாரிப்பது தீவிரபடுத்தப்பட்டுள்ளது.