தர்மபுரி ஆகஸ்ட், 2
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கல்குவாரி உள்ளது. இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் பாலப்பனஅள்ளி, தண்டேகுப்பம், எல்லப்பன்பாறை, கூலியனூர், ஐத்தாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. குவாரியில் வைக்கும் வெடியால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், வயதானவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் கற்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் கல்குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கிராம மக்கள் கல்குவாரியை மூடக்கோரியும், இதனைக் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
#Vanakambharatham#Dharmapuri#Demonstration#news