சென்னை செப், 16
தாய்ப் பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் இல்லாமல் சொத்து பத்திரம் பதிவு செய்ய தடை விதிக்கும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. பதிவு சட்ட திருத்தம் வாயிலாக அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு,
பதிவுக்காக ஒரு பத்திரம் தாக்கல் செய்யப்படும் போது விற்பவரின் உரிமையை உறுதிப்படுத்தும் தாய் பத்திரத்தின் அசல் பிரதி அவசியம். இத்துடன் 10 நாட்கள் முன் வரையிலான வில்லங்கச் சான்று இணைக்கப்பட வேண்டும்.
மேலும் அடமானம், வழக்கு காரணமாக முடக்கம் விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக வில்லங்கம் இருந்தால் உரிய அதிகார அமைப்பின் தடையின்மை சான்றுடன் பத்திரம் தாக்கலாவது கட்டாயம். முன்னோரிடமிருந்து கிடைத்த பரம்பரை சொத்து என்று தாய்ப்பத்திரம் இல்லாமல் வரும் புதிய கிரைய பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக் கூடாது. அந்த சொத்தில் விற்பவரின் உரிமையை தெளிவுபடுத்தும் வகையில் பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்களை ஆதாரமாக இணைக்கலாம்.
இதனைத் தொடர்ந்து முந்தைய அசல் பத்திரம் தொலைந்து போயிருந்தால் அது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததற்கான ஆவணத்துடன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றுடன் பத்திரத்தை தாக்கல் செய்யலாம். இதில் பத்திரம் காணாமல் போனது குறித்து உள்ளூர் பத்திரிகை விளம்பரம் வெளியிட்டு இருக்க வேண்டியது அவசியம். இந்த விளம்பரப் பிரதி கண்டுபிடிக்க முடியவில்லை என்ற காவல் துறை சான்றிதழை ஸ்கேன் செய்து பத்திர த்தில் சேர்க்க வேண்டும்.
இவை மட்டுமல்லாது அரசு துறை அமைப்புகளிடமிருந்து தனி நபர்கள் பெயருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை பதிவு செய்ய அசல் தாய் பத்திரம் கட்டாயம் இல்லை. அதே நேரத்தில் இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் அந்தந்த நேரத்தில் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது. பழைய தாய் பத்திரங்களை ஆய்வு செய்யும்போது அதில் ஷெட்யூல் எனப்படும் சொத்து விபரங்களும் பதிவுக்கு வரும் பத்திரத்தில் உள்ள விபரங்களும் ஒத்துப் போகிறதா என்பதை சரி பார்த்து சார் பதிவாளர் சான்றிட வேண்டும்.