கோயம்புத்தூர் செப், 15
கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக. சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட 390 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதிமுக. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இது பற்றி அறிந்ததும் கோவையில் அதிமுகவினர் வேலுமணி வீட்டு கேட்டின் முன்பு சாலையில் அமர்ந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக துணை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் அம்மன் அர்ச்சுனன், அருண்குமார் உள்பட 7 அதிமுக. சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட 390 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் என்ற பிரிவின் கீழ் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.