திருச்சி செப், 14
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன். இவர் தொட்டியம் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி எதிரே இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று இவர் பட்டறையை திறந்து வைத்து விட்டு, வாகனத்திற்கு உதிரிபாகங்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது பட்டறை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அருள்முருகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் அந்தோணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் பட்டறையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தொட்டியம் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.