அரியலூர் செப், 13
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 251 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராம மக்கள் ஒன்று திரண்டுவந்து அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அக்கடை திறக்கக்கூடாது என பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அவ்விடத்தில் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக்கடையை திறக்கக்கூடாது என துளாரங்குறிச்சி ஊராட்சி சார்பாக கடந்த சுதந்திரதினத்தன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.