Spread the love

நெல்லை செப், 12

தமிழகத்தின் 6வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வார்டுகளில் அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு உதவி கமிஷனர், பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேஸ்திரிகள் என சுமார் 100 பேர் வரை பணியில் இருக்கின்றனர்.

மேலும் இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் உள்ளனர். இது தவிர சுமார் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் கமிஷனர், நிர்வாகம், கணக்கு உள்ளிட்ட தனித்தனி துறைகளுக்கு உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணிகள் மேற்கொள்வதற்கு என மொத்தமாக மாநகராட்சியில் 1,500 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு மண்டலத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றினால் அவருக்கு சுகாதார அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் பதவி உயர்வுக்கு தகுதியான 5 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு கமிஷனர் பார்வைக்கு சென்றதாகவும் அவர் கையெழுத்திட்டு அனுப்பிய நிலையில், கவுன்சில் கூட்டத்தில் அந்த பதவி உயர்வு ஆணைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.

அதாவது மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான பணி ஆணையை வழங்குவதற்கு ஆணையர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார். ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது.

இதேநிலைதான் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், பதவி உயர்வு கொண்டு வந்தால் சம்பளமும் உயர்த்தி வழங்க வேண்டும். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் கூறி கவுன்சில் கூட்டத்தில் அந்த தீர்மானத்தை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அதே நேரத்தில் பதவி உயர்வு மற்றும் அதற்குரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனில் மிகப்பெரிய தொகையை அரசியல் பிரமுகர்கள் லஞ்சமாக கேட்கின்றனர் என்றும் அதிகாரிகள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *