Spread the love

சென்னை செப், 6

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ம்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருக்கிறார்கள்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது.

இந்த நிலையில் நாளை நீட் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31 ம்தேதி வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நாளை பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. neet.nta.nic.in இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு முடிவு நாளை வெளிவர இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும் என மாணவர்கள் கணக்கிட்டு இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக முடிவு வர இருப்பதால் பதட்டமாகவும் காணப்படுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *