பொள்ளாச்சி செப், 5
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள மார்க்கெட்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட பிரதான காய்கறி சந்தை மற்றும் 31க்கும் மேற்பட்ட வாரச்சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் காய்கறிகளின் வரத்து, 25 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், ஓணம் பண்டிகை வருவதால், காய்கறிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், ஐந்து முதல் பத்து ரூபாய் வரையில் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம், 14 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, வரத்து குறைவால் இந்த வாரம், 30 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.பச்சை மிளகாய் கிலோவுக்கு, 10 ரூபாய், கத்தரிக்காய் கிலோவுக்கு, ஐந்து ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து விலை உயரும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்