கடலாடி ஆக, 9
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் இராஜாநாதன். இவர் பெயிண்டிங்க் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யன்ராஜ் என்பவரிடமிருந்து 7 செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கி ஆஸ்பெட்டாஷ் கூறை போட்ட வீடு கட்டி குடியிருந்து வீட்டு வரி ரசீது பெற்றுவருகிறார்.
இந்நிலையில் மேற்படி வீட்டிற்கு மின்இணைப்பு வேண்டி கடலாடி மின் பகிர்மான அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அங்கிருந்த வணிக வரி ஆய்வாளர் திரு.முத்துவேல் வீட்டு வரி ரசீதை வைத்து மின்இணைப்பு பெற முடியாது உங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து அதன் நகல் வேண்டும் எனக்கூறியுள்ளார்.
மேற்படி நிலமானது ராஜநாதன் பெயரில் இன்னும் பத்திரம் பதிவு செய்யாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளது. எனவே மேற்படி வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி நில உரிமையாளரான அய்யன்ராஜ் என்பவரின் பெயரில் அவரது பத்திரத்தை வைத்து மின் இணைப்பு வேண்டி ஆன்லயனில் பதிவு செய்துள்ளார். அதன் பொருட்டு மேற்படி இடத்தை பார்வையிட கடலாடி மின் பகிர்மான அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப்பொறியாளர் கணேஷ்குமார் மற்றும் வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் மேற்படி இடத்தில் புதிதாக மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் மனுதாரர் இராஜநாதனிடம் வந்து சென்ற செலவிற்காக ரூ.2000/- கேட்டுள்ளனர். அதற்கு மனுதாரர் தன்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை என்றுள்ளார். பின்னர் சுமார் 10 நாள்கள் கழித்து மீண்டும் மேற்படி அலுவலகம் சென்று மின் இணைப்பு பற்றி விசாரிக்க மேற்படி உதவி பொறியாளர் மின் மீட்டருக்கு ஆன்லயனில் ரூ.7000/- கட்டவேண்டும் அதன் பின்னர் மின்கம்பம் மற்றும் இணைப்புக்கு மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் அதன் விபரங்களை வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சொல்வார் அவரை பாருங்கள் சொல்வார் என்று கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மேற்படி முத்துவேலை அணுகியபோது அவர் மேற்படி இணைப்புக்கான மதிப்பீடு தயார் செய்ய ஆன்லைனில் பணம் கட்டியது போக எங்களுக்கு தனியாக ரூ.5000 செலவுக்கு தந்தால் தான் வேலையாகும் என கூறியுள்ளார். அதற்கு மனு தாரர் தான் கூலி தொழிலாளி என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூற அப்படியால் ரூ.4000/- கொடுத்தால்தான் வேலையாகும் என கறாராக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மனுதாரர் இராஜநாதன் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை நாடியுள்ளார்.
இது தொடர்பாக புகார் ஒன்றை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மேற்படி அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது மேற்படி வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சந்திக்கும் போது மேற்படி லஞ்சப்பணத்தை அவ்வலுவலக கேங்மேன் செந்தூர்பாண்டி என்பவரிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி செந்தூர்பாண்டி அப்பணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சுற்றிவளைத்து விசாரணை செய்தனர்.
அதற்கு செந்தூர்பாண்டி மேற்படி பணம் ஏன் எதற்கு என்று தெரியாது எனது மேல் அதிகாரிகள் வாங்கிவைக்கும்படி சொன்னதால் வாங்கியதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து லஞ்சம் கேட்ட கடலாடி மின் பகிர்மான அலுவலக உதவிப்பொறியாளர் கணேஷ்குமார் மற்றும் வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்