கீழக்கரை ஜூலை, 21
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கழிவு நீர் வெளியேற்றும் நிரந்தர திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(20.07.2024) நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் கீழக்கரையை சேர்ந்த ஜமாத் பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். கழிவு நீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் ஜமாத்தார்கள் மூலம் அந்த நிலத்தை கேட்பதென்றும் நிலம் கிடைக்காத பட்சத்தில் அதற்கான தொகை ஒரு கோடி ரூபாயில் 50 லட்சத்தை கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டி அல்ஹாஜ் சீனா தானா(எ) செய்யது அப்துல் காதர் அவர்களிடமும் மீதமுள்ள 50 லட்சத்தை ஜமாத்தார்களிடம் வாங்குவதென்றும் ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே கழிவு நீர் அகற்றுவதற்கான பம்பிங் ஸ்டேஷன் அமைக்க தெற்குத்தெரு ஜமாத் சார்பில் கொடுக்கப்பட்ட இடத்தை இன்று வரை நகராட்சி பயன்படுத்தாது ஏன்? என்று ஜமாத் பிரதிநிதி நிஸ்பார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லப்படாமலேயே கூட்டம் முடிவு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்த கட்ட கூட்டம் நடைபெறும் நாள் குறித்த அறிவிப்புகள் ஏதுமின்றி கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த கூட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- முதலில் சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர், சேர்மன்,துணைதுணை சேர்மன்,கவுன்சிலர்கள் இந்த திட்டத்திற்காக எவ்வளவு நிதி உதவி செய்ய போகின்றனர் என்னும் அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள தொகையை அனைத்து சமூகத்தாரிடமும் கேட்டு பெற முயற்சிக்க வேண்டுமென கூறினர்.
13 கோடி நிதி ஒதுக்கீடு செய்த அரசு நிலத்திற்கான ஒரு கோடியையும் சேர்த்து ஒதுக்கீடு செய்தால் நமதூருக்கு உருப்படியான திட்டமொன்று நிறைவேறிய வாய்ப்பாக அமையுமென்கின்றனர் பொதுமக்கள்.
நிலம் வாங்குவதிலும் அதற்கான நிதி பெறுவதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் அரசால் ஒதுக்கப்பட்ட 13 கோடி ரூபாயும் திரும்ப போய்விடும் என்னும் நகராட்சி அறிவிப்பால் கழிவுநீர் அகற்றும் பணி நமதூரில் முழுமை பெறுமா? என்னும் கேள்வி நீடித்து வருகிறது.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்