கேரளா ஆக, 30
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில், நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவு காரணமாக, சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு, மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. இந்த விபத்தில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த சோமன் அவரது மனைவி ஷிஜி, மகள் ஷிமா, ஷிமாவின் மகன் தேவானந்த் சோமனின் தாயார் தங்கம்மா ஆகிய 5 பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவில் வீடு புதையுண்ட சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய குழு, நவீன இயந்திரங்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணிகளை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, மோப்ப நாயின் உதவியுடன் அனைவரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.