தூத்துக்குடி ஜூன், 2
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி நகர சுமை ஏற்றி இறக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் அப்பகுதியில் வாகனங்களில் இருந்து வரும் பொருட்களை ஏற்றி இறக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு தரப்பினர் இவர்கள் பணிக்கு இடையூறு செய்து வருவதாக பாதிக்கப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்கனவே கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர். ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிகிறது. இதனை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பையும் அழைத்து விரைந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.