Spread the love

ஏப்ரல், 25

`ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சு… ரெண்டு குடம் தண்ணி எடுத்து ரெண்டு பூ பூத்துச்சு…’ – சிறுவர் சிறுமியர் கூடி நின்று விளையாடும் இந்த விளையாட்டு அந்த காலத்தில் பிரபலம். அதேபோன்று `கோணக்கோண புளியங்கா, கொம்புத்தட்டி வாழைக்காய், யானைக்காரன் பொண்டாட்டி…’ என்று கபடி விளையாட்டின்போது பாடிச் செல்வார்கள். ஆனால், நாகரிக வளர்ச்சியால் கிராமங்களில்கூட இதுபோன்ற பாரம்பர்ய விளையாட்டுகள் அழிந்துவருகின்றன. மேலும் நம் மரபு சார்ந்த தமிழர் விளையாட்டுகள் கிராமப்புற விளையாட்டுகளாகத் தள்ளப்பட்டு அவை வழக்கொழிந்து வருகின்றன. அந்நியக் கலாசாரம் நகர்ப்புற காற்றில் கலந்துவிட்டதே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மரபு விளையாட்டுகள் என்பது காலத்துக்கு ஏற்றவாறும் ஆண்,பெண் குழந்தைகளுக்கு தகுந்தவாறும் அமையும். பழந்தமிழர் பாரம்பர்யத்தில் காலச்சூழலுக்கு ஏற்ப உணவுகள் மட்டுமல்ல சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுகளும்கூட மாறிக்கொண்டே இருக்கும்.

சிறுவர்களுக்கான விளையாட்டான மல் எனப்படும் மல்லுக்கட்டுதல் விளையாட்டு உடலையும், மனதையும் வலிமைப்படுத்தும் ஒருவகை தற்காப்புக்கலை ஆகும். இந்த விளையாட்டில் இரண்டுபேர் ஆயுதமின்றி உடலை வளைத்து ஈடுபடுவார்கள். ஆனால் இந்த விளையாட்டை இளவயது ஆண்கள் முழுமையாகக் கற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் மட்டுமன்றி மிகச்சில பெண்களும்கூட கற்றுக்கொண்டு விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டு உடலை வலுப்படுத்துவதுடன் கட்டுமஸ்தான உடல்வாகு பெறவும் உதவும்.

எழில் எனப்படும் விளையாட்டு உடல் கட்டமைப்பை உறுதியாக்கும் ஒரு பயிற்சி. இது மற்போர் கலையின் தொடர்ச்சி.

கவண் எனப்படும் விளையாட்டு, மரங்களில் உள்ள காய்கள் மற்றும் கனிகளை குறிவைத்து அடிக்கும் விளையாட்டாகும். இந்த விளையாட்டு கற்று விளையாடும் விளையாட்டல்ல, அனுபவத்தில் கற்கக்கூடியதாகும். மாங்காய், கொய்யா மற்றும் நாவல் பழங்களின் ருசியைப் பலருக்கும் அறியவைத்த விளையாட்டு இது.

ராமாயண, மகாபாரதம் காலத்தில் தொடங்கி தற்போதைய பாகுபலி காலம் வரை இந்த விளையாட்டைப் பார்த்தே வளர்ந்திருக்கிறோம். அக்காலத்தில் சிம்புகளை வளைத்து வில் செய்து ஊகம் என்னும் நாணல் தட்டையால் அம்பு செய்து அதன் நுனியில் கள்ளிமுள்ளைச் செருகி குறிசெய்து அடித்து விளையாடுவார்கள்.

`ஆடு புலி ஆட்டம்’ என்பது நம் அறிவு சார்ந்த பொழுதுபோக்கு விளையாட்டு. இதனை விளையாட இரண்டு பேர் போதும். இதில் ஆடுகளைக் கொண்டு புலிகளை அடக்குவதே முக்கியமான குறிக்கோள். அதாவது புலிதான் ஆடுகளைக் கொன்று தனது உணவினை பெற்றுக்கொள்ளும். இங்கு ஆடுகள் கூட்டமாக இருந்து புலிகளை அடக்கும்.

இந்த விளையாட்டு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு அறிவையும் ஞாபக சக்தியையும் மேம்படுத்துகிறது.

சிறுவர் விளையாட்டுகளைப் போல சிறுமியர் விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவை.

கறங்கு: கறங்கு என்றால் சுழற்சி. நெய்தல் திணையின் மரமான பனை மரத்தின் ஓலையைச் சீவி வெட்டி, காற்றாடிபோல செய்து காற்று வரும் திசையைநோக்கி ஓடினால் சுழலும். இது காற்று வீசும் திசையையும், மற்ற திசைகளையும் அறிய உதவும்.

சிற்றில்: இந்த விளையாட்டு நெய்தல் கறைகளை ஒட்டிய மண்சார்ந்த விளையாட்டாகும். கடற்கரையை ஒட்டிய இடத்தில் மணலைக் குவித்து வீடு கட்டி விளையாடுவது. சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும்கூட இந்த விளையாட்டு பிடிக்கும்.

தெற்றி: ஒரே மாதிரியான உருண்டையான சிறிய கூழங்கற்களைக்கொண்டு விளையாடும் இந்த விளையாட்டை ‘பாண்டிக்கல்’ என்றும் அழைப்பார்கள். இந்த விளையாட்டு ஒவ்வொரு ஊர்களிலும், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக்கொண்டு விளையாடப்படுகிறது. விளையாட்டைச் சுவாரஸ்யமாக்க பாட்டுப்பாடிக் கொண்டு ஆடுவார்கள்.

ஏழு கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டத்தில் ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான், ஐந்தான், ஆறான், ஏழான், எட்டான், ஒன்பதான், பத்தான் என பத்து பிரிவுகள் ஆட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எடுக்கவேண்டிய கற்களின் எண்ணிக்கைக்கும் எடுக்கவேண்டிய விதத்துக்கும் விதிமுறைகள் உண்டு. ஒவ்வொன்றை ஆரம்பிக்கும்போதும் ஏழு கற்களையும் கீழேவிரித்தவாறு போட்டுவிட்டு அதில் ஒரு கல்லை ‘தாய்ச்சிக்கல்’ எனக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ச்சிக் கல்லை மேலே வீசியெறிந்துவிட்டு அது கீழே கைக்கு வந்து சேருவதற்குமுன் கீழேகிடக்கும் மற்ற கற்களை அலுங்காமல் (ஒன்றை எடுக்கும்போது அடுத்ததைத் தொட்டுவிடக்கூடாது) கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து விழும் தாய்ச்சிக் கல்லைப் பிடித்துவிட வேண்டும். தொடர்ந்து பத்து பிரிவிலும் தாய்ச்சிக் கல்லை கீழே விட்டுவிடாமல் ஆடினால் மீண்டும் ஒண்ணானை கட்டை என்றபெயரில் விளையாடி ஜெயித்ததாகக் கொள்ளப்படும்.

நமது பாரம்பர்ய விளையாட்டுகள் உடல்திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியில் திளைக்கவும் துணைபுரிகின்றன. இதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தவும், வாழ்வியலில் எதிர்பாராத தோல்விகளை எதிர்கொண்டு மீண்டு வரவும் இந்த விளையாட்டுகள் பயன்படும். சங்ககால இலக்கியங்களில் இந்த விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதற்கான தரவுகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ளன.

உடல்திறனை வளர்ப்பதுடன் மன வலிமையைத் தரும் பாரம்பர்ய விளையாட்டுகள் மற்றும் கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுத்து அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பலருக்கும் பாரம்பர்ய விளையாட்டுகள் மீதான புரிதல் ஏற்பட்டு அதைக் கற்று வருகின்றனர். அதனை மேலும் அதிகரிக்கச் செய்வது நமது கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *