தூத்துக்குடி ஆக, 26
பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் வகையில் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
இந்த நடைபயணத்தின்போது தமிழகத்தில் ராகுல்காந்தி 3 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ளி பிரசாத் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கன்னியாகுமரிக்கு சென்று ராகுல்காந்தி நடைபயணம் தொடங்க உள்ள இடத்தையும், அவர் செல்லும் பகுதிகளையும் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர்.
மேலும் நடைபயணத்துக்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து மாநில தலைவர் அழகிரி மற்றும் தேசிய தலைவர்கள் வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் நடைபயணத்துக்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தென்மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், விஜய்வசந்த், ஜோதிமணி, செல்வகுமார், முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழக பொருளாளர் ரூபி மனோகரன் துணைத்தலைவர் சண்முகம், சட்டமன்ற கங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதாரணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.