விழுப்புரம் ஆகஸ்ட், 26
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியதாவது,
விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது. நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை வைப்பதற்கான அரங்குகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் தேவையான முதலுதவி, மருத்துவ வசதிகள் இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும்பொது இடங்களில் நிறுவப்படவுள்ள விநாயகர் சிலை 10 அடிக்கும் மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், கரைக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. இந்த வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் துணை ஆட்சியர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.