கீழக்கரை பிப், 27
கடந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் உங்கள் ஊரில் உங்களை தேடி என்னும் மாவட்ட ஆட்சியர் முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், மகளிர் உரிமை தொகை,ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக விண்ணப்பங்கள் வழங்கினர்.
இந்த முகாம்களின் மூலம் பயனடைந்தோரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானதென்றும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு தீர்வு ஏதும் கிடைக்கவில்லை என புகார் செய்து வருகின்றனர்.
கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த நபர் பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார், முகாம் முடிந்து ஒரு மாத காலமாகியும் தனக்கான பிறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இவரது கோரிக்கைக்கு 1969 வருடத்திற்கான பிறப்பு சான்றிதழ் அலுவலகத்தில் இல்லை என பதில் கூறியுள்ளனர். தம்மிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்து பிறப்பு சான்றிதழ் வழங்காதது ஏன்? என கேள்வியும் எழுப்பியுள்ளார். முகாமில் இவர் கொடுத்த புகார் மனு பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆன்லைன் மூலம் பரிசோதிக்கும் போது உங்கள் கோரிக்கை மனு பெறப்படவில்லை என பதில் வந்துள்ளது.
அப்படியானால் இரண்டு முகாம்களிலும் இவர் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அவற்றை என்ன செய்தார்கள்? என்ற கேள்விக்கு மௌனமே பதிலாக உள்ளது.
அரசியல் விளம்பரத்துக்காக ஏன் இந்த கண் துடைப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென்பதே மக்களின் குமுறலாக உள்ளது.பொதுவாக இதுபோன்ற முகாம்கள் அரசியல் விளம்பரத்துக்கானது மட்டுமே என்பதை இனியாவது மக்கள் உணர்ந்து கொண்டு தங்களின் நேரத்தையும்,பொருளாதாரத்தையும் வீணடிக்க வேண்டாமென்கிறார் கீழக்கரை சமூக ஆர்வலர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.