கீழக்கரை பிப், 2
60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட அரசுத்துறை நிறுவனங்களான அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், காவல்நிலையம், நகராட்சி அலுவலகம், மின்வாரிய அலுவலகம் போன்றவற்றில் போதுமான பணியாட்கள் இல்லாததால் மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு பணிகளும் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கியுள்ளது.
கீழக்கரை மின்வாரிய பிரச்சினைகள் தோண்ட தோண்ட பூதாகரமாய் கிளம்புகிறது. மின் மீட்டர் பழுதடைந்து அதனை மாற்றி தருமாறு நூற்றுக்கனக்கான மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
எங்களுக்கு மேலே உள்ள அலுவலகத்தில் இருந்து மின் மீட்டர் வரவில்லை,வந்ததும் மாற்றி தருகிறோம் என்ற ஒற்றை வரி பதிலை வழக்கமாக கொடுத்து வருகின்றனர்.
மின் இணைப்பு எண் B1096 மின் மீட்டர் பழுதடைந்து மாற்றி தரக்கோரி விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும் இதுவரை மாற்றி கொடுக்கவில்லை. கடைசியாக அந்த மின் மீட்டர் செயலாக்கத்தின் கட்டண தொகை 1725.00 ரூபாய் தான் வந்துள்ளது.
மின் மீட்டர் பழுதடைந்த பிறகு 3200 ரூபாய்க்கு நீங்கள் மின்சாரம் பயன்படுத்தியுள்ளீர்கள் ஒன்றுக்கு இரண்டாக பணம் கட்ட வேண்டுமென கூறுகிறார்கள் இதை எப்படி கணக்கிட்டீர்கள் எனக்கேட்டால்? குத்து மதிப்பா தோராயமா தான் வசூலிக்கிறோம் என்கிறார்கள்.
மின் இணைப்பு எண் C968 டோர் லாக் உள்ள ஒரு கடையின் இரண்டு மாத மினிமம் கட்டணமான 408ரூபாய் இரண்டு தவணையிலும் கட்டவில்லை என்பதற்காக அந்த தொகைக்கு வட்டி,வட்டிக்கு வட்டி என 816 ரூபாய் கட்டாத கட்டணத்துக்கு கந்து வட்டியை போல 416 ரூபாய் கூடுதலாக வசூல் செய்துள்ளனர்.
மாதம் மாதம் மின் கணக்கீடு எடுப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கம் போல் இரண்டு மாதம் கழித்தே மின் கணக்கீடு எடுக்கிறது.இதில் கீழக்கரையில் 70 நாட்கள் கழித்தும் கூட மின் கணக்கீடு எடுத்து ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணத்தை மக்களின் தலையில் பேரிடியாய் இறக்குகிறது.
சராசரியாக நாம் எடுத்த தகவலின் அடிப்படையில் 10ல் 8 பேர் கீழக்கரை மின் வாரியத்தின் மீது பலத்த அதிருப்தி கொண்டுள்ளனர்.மின்வாரியத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்து காணப்படுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
விடியல் ஆட்சி வந்தும் கீழக்கரை மின் வாரியத்துக்கு மட்டும் விடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.