கீழக்கரை பிப், 1
உங்களை தேடி உங்கள் ஊரில்….என்னும் மாவட்ட ஆட்சியரின் முகாம் நிகழ்ச்சியில் பொதுமக்களை விட நகர்மன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமாக தங்களின் வார்டுக்கான திட்டங்களை கோரிக்கையாக முன்வைக்க நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:-
1வது வார்டு பாதுஷா:- வடக்குத்தெரு கொந்தன்கருணை அப்பா தர்ஹா,DSP அலுவலக சாலை மிகவும் முக்கியமானது இதன் வழியாக தாசீம்பீவி மகளிர் கல்லூரிக்கும் வாகனங்கள் செல்கிறது.இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் இதுகுறித்து புகார் கொடுத்தால் தில்லையேந்தல் பஞ்சாயத்து தான் பார்க்கனும்னு சொல்கிறார்கள்.
தில்லையேந்தல் பஞ்சாயத்திலும் பலமுறை புகாரளித்தாச்சு.இந்த சாலைப்பகுதியை கீழக்கரை நகராட்சியோடு இணைத்து புதிய சாலை அமைத்துக்கொடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்போகிறேன்.
மூர் நவாஸ் 19 வது வார்டு:- அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து வருகிறது.புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரையிலாவது தற்போதைய சிறு சிறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றம் விசயத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்ளாமல் முத்துச்சாமிபுரம் ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி அரசு ஒதுக்கீடு செய்த 20 லட்சம் ரூபாயில் சிறுவர் பூங்கா அமைத்திட நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கிறேன்.
நசுருதீன் 9வது வார்டு:- எனது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட LED தெருவிளக்குகள் இதுவரை மின்கம்பத்தில் பொருத்தப்படாமல் இருப்பதையும் சாலைகளை பராமரிப்பு செய்து தரவும் கோரிக்கை வைக்கிறேன்.
சுஐபு 14வது வார்டு:- கீழக்கரையில் நாய் தொல்லைகள் அதிகரித்து வருவதால் நிரந்தரமாக நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் மையம் ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.
மீரான் அலி 7வது வார்டு:- அரசு அறிவித்த மகளிர் உரிமை தொகை கீழக்கரையில் பலருக்கும் விடுபட்டுள்ளதால் உரிமை தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன்.
சூர்யகலா 4வது வார்டு:- பழுதடைந்துள்ள புதிய பேரூந்து நிலையம்,மீன்கடையை இடித்து விட்டு புதிய கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.மறவர் தெரு,முத்துச்சாமிபுரம் ஆரம்ப பள்ளிகளை திருப்புல்லாணி ஊராட்சியில் இருந்து பிரித்து கீழக்கரை நகராட்சியுடன் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.
சித்திக் 21வது வார்டு:- எனது வார்டு முழுவதும் போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் குழாய் பதிக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
சேக் உசேன் 20வது வார்டு:- எனது வார்டுக்குட்ப்பட்ட 21 குடிசைபகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்கான திட்டமிடலோடு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து விட்டு கனவுகளோடு காத்திருக்கின்றனர்.
கவுன்சிலர்களின் கனவுகள் மெய்படுமா? அல்லது கானல் நீர் ஆகிவிடுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.