கீழக்கரை ஜன, 31
தமிழக அரசு அறிவித்த உங்களை தேடி உங்கள் ஊரில் என்னும் திட்டம் கீழக்கரை நகராட்சியில் இன்று(31.01.2024) மாலை 4 .30 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என சமூக வலை தளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவார் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மனுக்கள் கொடுக்க மாலை 4 மணிக்கெல்லாம் ஆண்கள்,பெண்கள் என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குழுமினர்.
திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் ஆட்சியர் மக்களை சந்திக்காமல் மாலை 5.05 க்கு சந்திப்பதற்காக நகராட்சி கூட்ட அரங்கம் உள்ள மாடியில் இருந்து கீழே இறங்கியவர் நகராட்சி ஆணையாளர் அறைக்குள் நுழைந்தார்.
வராண்டாவில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆட்சியரை சந்திக்க முடியாமல் மூச்சு திணறலோடு குமுறினர். முறையான திட்டமிடல் இல்லாமல் மகக்ளை அலைக்கழித்த கீழக்கரை நகராட்சி அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளையும் பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மனு கொடுக்க வந்த நபர் ஒருவர் வெறும் மனுவை வாங்குவதற்கு ஆட்சியர் தேவையில்லையே? அவருக்கு கீழ் பணிபுரியும் மூன்று நான்கு அதிகாரிகள் போதுமே? ஏன் இந்த அலைகழிப்பு? என குமுறினார்.
தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தை கூட முறையாக செயல்படுத்த தெரியாத நகராட்சி அதிகாரிகள் மீதும் தமிழக முதல்வர் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.எடுப்பாரா என பொதுமக்கள் தலையில் அடித்துக்கொண்டு குமுறல்களுடனும், மன உளைச்சலுடனும் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.