வேலூர் ஆகஸ்ட், 24
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பெருமாள், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். விடுமுறை தினத்தில் இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொலி காட்சி மூலம் ஆய்வுகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.