மயிலாடுதுறை ஆகஸ்ட், 22
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) கோயில் மகாகும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது.
இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என பெயர் ஏற்பட்டது.
இந்தத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்து, இறந்துவிடும் தோஷம் உள்ளவர்களுக்கும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களுக்கும் நன்மை நடக்கும் என்பது ஐதீகம். சூரிய பகவான் இந்தத் தலத்தை வழிபட்டதால் `தலைஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இந்தத் திருத்தலம் 50 வருடங்களுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. சிதிலமடைந்த கோயிலை சீர்செய்யவும் கோயில் நிர்வாகம் முன்வரவில்லை’’ என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் புகார். இது குறித்து 2018 ம் ஆண்டு, தருமபுரம் ஆதீனம் கல்விக் குழுமங்களின் செயலர் திருநாவுக்கரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
“தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் சிதிலமடைந்து இருப்பது தெரிந்தவுடனே அதைச் சரி செய்யும் பணிகளைத் தொடங்கி, பாலாலயம் செய்துவிட்டோம். `கும்பாபிஷேகம் செய்ய இந்து அறநிலையத் துறையின் ஒப்புதல் வேண்டும்’ என்று அரசாணை இருக்கிறது. கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தையும் அதற்கான சான்றுகளையும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் ஒப்புதல் கொடுத்தவுடனே கும்பாபிஷேகம் செய்வதற்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம்’’ எனக் கூறியிருந்தார்.
அன்று அவர் கூறிய நிகழ்வு இன்று நடந்துவிட்டதால், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தருமை, வேளாக்குறிச்சி, சூர்யனார் கோவில் பொறுப்பில் உள்ள ஆதீனங்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்
இதனைத் தொடர்ந்து, இறைத் தொண்டு ஆற்றியவர்களுக்கு பொற்பதக்க விருதுகள் வழங்கி கோவில் நிர்வாகம் கௌரவித்தது.