சென்னை ஆகஸ்ட், 22
நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியாகவும், பெற்றோராகவும் ஒன்றாகப் பயணித்ததாகவும், தற்போது தானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களின் பிரிவு குறித்து இன்றளவும் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் தான் இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைராலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தனது மூத்தமகனின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் தந்து மகன்களுடன் இணைந்து குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத் தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் பிரபல பாடகர் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவர் மனைவியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.