தருமபுரி டிச, 3
சேலம் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2000-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு எதிரில் தர்மபுரியின் முக்கியசாலையாக இருந்து வரும் எஸ்.பி ரோடு பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் எப்போதும் கூட்ட நெரிசல் இச்சாலையில் இருந்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து உணவகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள அணுகு சாலையில் பேருந்துகள் செல்லாதவாறு பெரிய பள்ளத்தை தோண்டியுள்ளனர். மேலும் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் தர்மபுரி சேலம் சாலையில் நின்று பேருந்தில் ஏறி செல்வதால் பெரும் போக்குவரத்து இடையூறு இருந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் சாலைக்கு குறுக்கே மேம்பாலம் நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் பேருந்து நிறுத்த அணுகு சாலையை சீரமைத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.