நவ, 21
அழகாக மற்றும் இளமையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இருக்கும். அழகாக இருப்பதற்கு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்தால் மட்டும் போதாது, சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் தவறாமல் கிடைக்க வேண்டும்.
அதுவும் வயது அதிகரிக்கும் போது தசைகளின் நிறை குறுக்கிடத் தொடங்குவதோடு, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய தொடங்கும் மற்றும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையும் இழக்கத் தொடங்கும். இப்படியெல்லம் ஏற்படுவதால் தான் முதுமை தோற்றம் தெரிகிறது.
ஆனால் இப்படி வயது அதிகரிக்கும் போது உடலில் ஏற்படும் இவ்வளவு மாற்றங்களை நல்ல மற்றும் சரியான உணவுகளை உண்பதன் மூலம் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடலாம். ஆண்களுக்கு 40 வயதை எட்டியவுடன் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது மற்றும் உடலில் பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்குகின்றன. அதேப் போல் சருமத்தில் சுருக்கங்கள் தெரிய ஆரம்பிக்கிறது. ஆனால் ஆண்கள் சில உணவுகளை தங்களின் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், 40 வயதிலும் இளமையாக காட்சியளிக்கலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
நட்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ நினைப்பவர்கள், அன்றாட உணவில் நட்ஸ்களை சேர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினசரி உணவில் ஒருவர் முந்திரி, பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு வேண்டிய ஒமேகா-3 சத்தைப் பெறலாம். எனவே இளமையை நீட்டிக்க விரும்பினால், தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுங்கள்.
தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவி புரியும். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருந்தால், அது வயதான தோற்றத்தை தள்ளிப் போடும். ஆனால் தற்போது நிறைய பேர் போதுமான அளவு நீரைக் குடிப்பதில்லை. எனவே நீங்கள் இளமையாக காட்சியளிக்க விரும்பினால், தினமும் நிறைய தண்ணீரைக் குடியுங்கள்.
பல ஆண்டுகளாக க்ரீன் டீ மக்களிடையே மிகவும் பிரபலமான மூலிகை பானமாக குடிக்கப்பட்டு வருகிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் கேட்டசின் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளதால், அதை தினமும் குடிக்கும் போது, நீண்ட காலம் இளமையாக இருக்க உதவி புரியும்.
ஆண்கள் சாக்லேட்டை அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் சாக்லேட் முதுமைத் தோற்றத்தை எதிர்த்துப் போராட உதவும். ஏனெனில் சாக்லேட்டில் ப்ளேவோனாய்டுகள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது முதுமை செயல்பாட்டை மெதுவாக்க உதவி புரிகிறது. எனவே நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க விரும்பினால், தினமும் டார்க் சாக்லேட்டை சிறிது சாப்பிடுங்கள்.
இஞ்சி முதுமை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த உணவுப் பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. எனவே இந்த இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்த கொள்ள வேண்டும்.