சென்னை அக், 12
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய முடிவை வரவேற்றும், தமிழக சிறைகளில் உள்ள நீண்டநாள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அந்த கோரிக்கைக்கு வலுசேர்த்த அதிமுகவுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நன்றி தெரிவித்தார்.
தமிழக முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை நிறைவேறிடும் வகையில், அதிமுக தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி ஆதரவு தந்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் M.A. முனியசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், எஸ்.டி.பி.ஐ. மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத், மதுரை அதிமுக கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் M.A. முனியசாமி முக்கிய ஏற்பாடுகளை உடனிருந்து செய்தார்.