திண்டுக்கல் ஆக, 27
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் சங்க மாவட்ட செயலாளர் ஜஸ்டின், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முனிராஜ் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12ம் தேதி சென்னையில் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.