கடலூர் ஆக, 26
கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் சட்ட மன்ற தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியர் அருண் தம்புராஜ், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்து தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள், இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலையான இங்கு உரிய பராமரிப்பு இல்லாமல் சாதனங்களை பயன்படுத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொழிற்சாலைகளை சரியான முறையில் பராமரித்து உயிர் பலி ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். இதனை உறுதி மொழி குழுவினரால் மீண்டும் சில நாட்களில் திடீர் ஆய்வு செய்யப்படும். அப்போதும் இது போன்ற நிலை நீடித்தால் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் தொழிற்சாலை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஏதேனும் தொழிற்கூடங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடங்கினால் உரிய அனுமதி பெற்று தொடங்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.