கீழக்கரை ஆக, 2
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான வெறி நாய்களால் தினம் தினம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நாய் கடிக்கு ஆளாகி சில நேரங்களில் உயிர் போகும் அவல நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
நாய்க்கடி பிரச்சினைகளில் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி இன்று(02.08.2023)காலை 11மணிக்கு கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு சமூக அமைப்புகள்,அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கலந்து கொண்டது பார்ப்போர் கண்களை குளமாக்கின.
ஆர்ப்பாட்டத்தில் கீழக்கரையா?நாய்க்கரையா? என்ற கோஷம் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு நாய்களை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டன. இல்லையேல்….அடுத்தகட்டமாக மக்கள் திரள் மூலம் சாலை மறியல் நடத்துவோம் என்றும் கூறினர்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கினை போல் கண்டும் காணாமலும் கடந்து செல்லுமா? என்பதை காலம் தான் உணர்த்த வேண்டும்.
ஜஹாங்கீர்/மாவட்ட நிருபர்.
கீழக்கரை.