கீழக்கரை மே, 16
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் முக்கிய சாலைகளான வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் முஸ்லிம் பஜார் சாலைகளில் பெருகி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்று “நமது KLK வெல்ஃபேர் கமிட்டி” நிர்வாகிகள் ராமநாதபுரம் DM நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று(15.05.2023) நான்காவது அமர்வாக கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பயிற்சி ஆட்சியர் திரு நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீதுசுல்தான், காவல்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் நெய்னாமுகம்மது, நகராட்சி ஓவர்சீயர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் KLK வெல்ஃபேர் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்குரோட்டில் இருந்து கடற்கரை பழைய பேருந்து நிலையம் வரை ஒன்சைடு பார்க்கிங் ஏற்படுத்துவது, போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலை 8மணி முதல் காலை 11 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் வெளியூர் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஊருக்குள் செல்லாமல் புதிய பேருந்து நிலையத்திற்குள் திருப்பி விடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கீழக்கரையில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் திருக்குமரன் பாத்திரக்கடை அருகில் பயணிகளை ஏற்றிக்கொள்வதும் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் டூரிஸ்ட் ஹோம் அருகில் பயணிகளை இறக்கி விடவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர் சங்கம்,வணிகர் சங்கம் பொறுப்பாளர்களை அழைத்து பேசி ஆட்டோக்களை குறிப்பிட்ட ஆட்டோ ஸ்டாண்டுகளில் மட்டுமே நிறுத்த வேண்டுமெனவும் மற்ற இடங்களில் பயணிகளை இறக்கி விட்டு குறிப்பிட்ட ஸ்டாண்டுகளிலோ அல்லது போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாத பகுதிகளிலோ ஆட்டோக்களை நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
காவல்துறை, வருவாய்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட உதவி ஆட்சியர் நாராயணன் உத்தரவிட்டார்.
முன்னதாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த கீழக்கரை பகுதிகளை மாவட்ட உதவி ஆட்சியர் நாராயணன் மற்றும் தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு அதற்கான தீர்வினை காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.