கீழக்கரை மே, 4
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று(03.05.2023) காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான மூன்றாண்டு ஒப்பந்த பணியினை சென்னை Sumeet Green Enviro Services Pvt Ltd தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 334.45லட்சம் என வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான நிதி ஒதுக்கீட்டை 24.03.2023 நகர்மன்ற தீர்மான எண் 231ன் படி நகராட்சியின் பொதுநிதி மற்றும் 15 th CFC Grant நிதியில் இருந்து வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியது.
பின்னர் நடைபெற்ற வார்டு குறைகள் குறித்த விவாதத்தின் போது, 19வது வார்டு கவுன்சிலர் ஷர்ஃப்ராஸ் நவாஸ் ஊரெங்கும் குப்பைகளும் சாக்கடைகளும் மக்களின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அச்சுறுத்தி வருவதாகவும் இதுவிசயத்தில் நான் உள்ளிட்ட அனைவருமே 100% சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமென கூறினார்.
கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் தனது வார்டில் சுகாதார சீர்கேட்டினால் காய்ச்சல் பரவுவதாகவும் உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்த 5 வது வார்டு திமுக கவுன்சிலர் காயத்திரி இன்றைய கூட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கையில் வென்பிலான்(குளுகோஸ் டிரிப்)ஏற்றுவதற்கான நிலையோடு கலந்து கொண்டது அனைவரையும் கவலையுறச் செய்தது.
மக்களுக்காக பேசிய கவுன்சிலரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதினால் கவுன்சிலரே காய்ச்சலுக்குள்ளாகிய பரிதாப நிலை அப்பட்டமாக தெரிந்தது.
இனியாவது சுகாதாரம் குறித்து நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.