புதுடெல்லி ஆகஸ்ட், 15
உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இதனை தொடர்ந்து, டெல்லி செங்கோட்டைக்கு அவர் செல்கிறார். அவர், பிரதமர் மோடியை வரவேற்கிறார்.
இதேபோன்று, அருணாசல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை போலீசார் பல்வேறு உயரங்களில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.
மேலும் உத்தரகாண்டில் 17,500 அடி உயரத்தில் இந்தோ-திபெத் எல்லை போலீசார் தேசிய கொடியுடன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிக்கிமில் 18,800 அடி உயரத்தில் உள்ள குன்றின் மீது தேசிய கொடியை ஏந்தியபடி சென்று இந்தோ-திபெத் எல்லை காவல் துறையினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.