கீழக்கரை மார்ச், 28
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கீழக்கரையில் அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப சுகாதார நிலையம் கீழக்கரை மொட்டைபிள்ளைத்தெருவில் ஒரு சிறிய வாடகை வீட்டில் இயங்கி கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வாரம் ஒரு நாள் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனைக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
மேலும் நிலையத்தின் உள்பகுதியில் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லாததால் தெருவில் நிற்கும் அவலநிலை நீடிக்கிறது.தெருவில் அமர்வதற்கு கூட இருக்கை ஏதும் செய்து கொடுக்கப்படுவதில்லை.
கர்ப்பிணி பெண்களை அலைகழிக்கும் இந்த அவலநிலை குறித்து திருப்புல்லாணி வட்டார ஆரம்ப சுகாதார மையங்களின் பொறுப்பு அதிகாரியான கீழக்கரை மருத்துவர் ராசிக்தீன் கவனத்திற்கு SDPI கட்சி, கீழக்கரை சட்ட விழிப்புணர்வு கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சமூக நல ஆர்வலர்களும் கொண்டு சென்று முறையிட்டும் இதுநாள் வரை இதற்கான எந்த தீர்வினையும் மருத்துவர் ராசிக்தீன் செய்யவில்லை என்னும் புகார் “21 வார்டு மக்களின் விடியல் வெள்ளி” என்னும் வாட்சப் போன்ற சமூக வலை தளங்களில் பேசும் பொருளாகி வருகிறது.
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆட்சிக்கு இழுக்கு தேடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பொறுப்பில்லாமல் செயல்படும் மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலைகளை சரி செய்து கொடுக்கவும் கீழக்கரை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வணக்கம் பாரதம் சார்பில் நாமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.