Spread the love

துபாய் மார்ச், 01

உலகத் தாய் மொழி தினமான பிப்ரவரி 21 ம் தேதியை கொண்டாடும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, அதாவது 12 மணி நேரம் தொடர் இணையவழி பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்கம், தேசியக் கல்வி அறக்கட்டளை-கல்லிடைக்குறிச்சி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை & தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட திருக்குறள் இருக்கை – மதுரை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பள்ளி ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சென்னை, முத்திரை வலையொளி மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் “திருக்குறளில் வாழ்வியல்” என்ற கருத்து மையமாகக் கொள்ளப்பட்டது. துபாய்வாழ் தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் முன்னிலையில் உலகின் ஆறு கண்டங்களில் இருந்தும் 32 நாடுகளில் இருந்தும் 64 பேச்சாளர்கள் தொடர்ந்து பேசி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது .

தொடக்க விழா, நான்கு அமர்வுகள் மற்றும் நிறைவு விழா என விழா வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடக்க விழா பள்ளி ஆசிரியை கிரிஜா குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்க, தேசியக் கல்வி அறக்கட்டளை செயலாளர் கவிஞர் மஸ்கட் மு.பஷீர் வரவேற்புரை நல்க, முனைவர் ஆ. முகமது முகைதீன் நோக்கவுரை வழங்க மிகச் சிறப்பாகத் தொடங்கியது.

இவ்விழாவில் கலைமாமணி செவாலியர் டாக்டர் விஜிசந்தோசம் தலைமையுரை ஆற்றினார். பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய அவர் இவ்விழாவில் திருக்குறளின் பெருமைகளைப் பேசினார். மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் துவக்கவுரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ஜா. குமார், மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர்- மேற்கு வங்க அரசு கோ. பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் . முனைவர் போ.சத்தியமூர்த்தி, தலைவர் தமிழியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திருக்குறள் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து 32 நாடுகளில் இருந்து 64 பேச்சாளர்கள் திருக்குறளில் வாழ்வியல் பற்றி நான்கு அமர்வுகளில் பேசினார்கள்.
தொடர்ந்து நடந்த நிறைவு விழாவில் முனைவர் சிவசக்தி ராஜம்மாள் வரவேற்புரை வழங்க, கவிஞர் முனைவர் மஸ்கட் பஷீர் தொகுப்புரை வழங்கினார்கள். முகம்மது ஜியாவுதீன் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி கோயம்புத்தூர தலைமையுரை ஆற்ற சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த முனைவர் சா. முகம்மது ரபி பொது செயலாளர் உகாண்டா தமிழ் சங்கம் மற்றும் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் பேசினர். பேராசிரியர் பஞ்சநதம் மேனாள் துணை வேந்தர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஜி. ராஜமாணிக்கம் ஐஏஎஸ் , முதன்மை இயக்குனர், உள்ளாட்சித்துறை , கேரளா அரசு, இருவரும் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து முனைவர் ராஜேந்திரன், நிறுவனர் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா பிரைட் புக் ஆப் ரெகார்ட்ஸ் அவர்கள் உலக சாதனை சான்றிதழை வழங்கி விழாக் குழுவினரைப் பாராற்றிப் பேசினார்.

இது போன்றதொரு உலக சாதனையை பள்ளிமாணவர்களை ஈடுபடுத்தி வருங்காலத்தில் செய்ய வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த உலக சாதனை பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்க நிகழ்வை திறம்பட நடத்திய முனைவர் ஆ.முகமது முகைதினை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டினர்.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *