Spread the love

சென்னை ஜன, 27

மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர்.

குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சிறந்த மூன்று காவல் நிலையங்களுக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது. சிறந்த காவல்நிலையத்திற்கான கோப்பை திருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நா. உதயகுமார், திருச்சி நகர காவல் நிலைய ஆய்வாளர் சி தயாளன், திண்டுக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளர் சேதுபாலாஜி உள்ளிட்டோர் பெற்றனர்.

குடியரசு தின விழாவில், ஐந்து காவலர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைசெயலக காவலர் சரவணன், வேலூரைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

அடுத்ததாக, கலைநிகழ்ச்சிகளில் முதலாக, ஸ்ரீகாந் தேவாவின் இசையில் பாரதியாரின் பாரத தேசம் என்று சொல்லுவார் பாடலுக்கான நடனத்தை சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த நடனங்கள் பலரையும் ஈர்த்தன.

74வது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் சார்பில் வந்த ஊர்தியில் கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரி இடம்பெற்றது. ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற வாக்கியத்தை அந்த ஊர்தி தாங்கிவந்தது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை, தீயணைப்புத் துறை ஊர்திகள் இடம்பெற்றன. ஊர்திகளின் அணிவகுப்பு நிறைவுபெற்றதும், குடியரசு தின விழாவின் நிறைவு பகுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தமிழ்நாடு காவல்துறையினர் முரசு குழுவினர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *