கோயம்புத்தூர் ஆகஸ்ட், 12
எரிவாயு குழாய் பதிக்கும் பணி கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி கோவை விளாங்குறிச்சி-தண்ணீர்பந்தல் சாலை பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர்பந்தல் பகுதியில் கடந்த 8 ம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு பரிசோதனை நடந்தது. அப்போது திடீரென எரிவாயு குழாயில் ஒரு இடத்தில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்பட்ட காற்று வெளியேற தொடங்கியது. அப்போது பயங்கர சத்தத்துடன் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட ஆரம்பித்தனர்.
மேலும் அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் எரிவாயு குழாயை பரிசோதனை செய்யும் பணியை நிறுத்தி உள்ளனர்.