திருப்பூர் ஜன, 16
கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதனால் பூக்களின் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது.
குறிப்பாக மல்லிகைப்பூவின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவருகிறது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் கடந்த 10 தினங்களில் இதன் விலையானது ரூ.1,200-ல் இருந்து ரூ.1,600, ரூ.2 ஆயிரம், ரூ.2 ஆயிரத்து 800என அதிகரித்தது. இதற்கு அடுத்தபடியாக, முல்லைப்பூ, ஜாதிமல்லி, காக்கடா ஆகிய பூக்களின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பொங்கல் பண்டிகைக்கான விற்பனை வேகம் பெற்றுள்ளதால் பூக்களின் விலை மேலும் உச்சமடைந்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அனைத்து வகை பூக்களின் விலையும் தாறுமாறாக ஏறியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.